Wednesday, May 12, 2010

ரமணர்-9

ரமணர் - 9
ஆகவே காவ்ய கண்டரின் வருகைக்குப் பின் மகரிஷிகளின் தரிசனத்துக்கு வருபவர்களின் தொகை அதிகரித்தது. இப்போது பக்தர்களின் வினாக்களும் அதிகரித்தன. மகரிஷிகள் அருளிய விடைகளின் முக்கியமான பாகங்களைத் தொகுத்துச் சுலோகங்களாக அமைத்து ", ரமண கீதை" என்னும் நூலாக வெளியிட்டார், காவ்ய கண்டர். கணபதி முனிவர் சுவாமிகளிடம் நெருங்கிய அன்பு பூண்டவர். மகரிஷிகளிடம் அவர் கண்ட அற்புத சக்திகள் பல. 1906-ஆம் ஆண்டு காவ்யகண்டர் திருவொற்றியூரில் ஒரு பிள்ளையார் கோயிலில் தவம் செய்துகொண்டிருந்தர். திடீரென்று ஓர் இடத்தில் சந்தேகம் தோன்றியது. " மகரிஷிகள் அருகிருந்தல் இந்தச் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!" என்று மனதில் நினைத்தார். அக்கணமே மகரிஷிகள் உள்ளே நுழைவதுபோல் தோன்றியது. சாஷ்டாங்கமாக வீழ்ந்து அடிபணிந்தார்.
மகரிஷி தமது திருக்கரத்தால் அவர் தலையைத் தொட்டு அழுத்தினார். மின்சாரம் போன்றதோர் புதிய சக்தி தன்னுள் பாய்வதுபோன்று முனிவர் உணர்ந்தார்.மகரிஷிகளின் திருக்கரத்தால் ஹஸ்த தீட்சை பெற்றுவிட்டதை உணர்ந்த முனிவர் மகிழ்ந்தார். இதைப் பற்றிப் பின் மகரிஷிகள்கூறிய விவரமும் இதை ஒத்து இருக்கிறது. பகவான் அருளியதாவது: "ஒரு நாள் படுத்துக்கொண்டிருந்தது; சமாதியில் இல்லை.
திடீரென்று சரீரம் ஆகாயத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. சுற்றும் உள்ள பொருட்கள் யாவும் மறைந்தன.எங்கும் ஒரே வெண்§F¡தி. பிறகு சரீரம் ஓர் இடத்தில் இறங்கியதும் பொருள்கள் புலப்பட்டன.திருவொற்றியூரில் இருப்பதாக ஓர் எண்ணம் உதித்தது. ஒரு பெரிய ரஸ்தாவைப் பின்பற்றிச் செல்லுகையில், கொஞ்ச தூரம் தள்ளி ஒரு கணபதி கோயில் காணப்பட்டதும் உள்ளே சென்றது. அங்கே பேசியது உண்டு; என்ன பேசியது; என்ன செய்தது என்பது நினைப்பில் இல்லை. திடீரென்று விழித்த போது விரூபாக்‌ஷிகுகையில் படுத்திருந்தது. இப்படித் தான் சித்தர்களும் உலாவுவார்கள் என்று தெரிந்தது." இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மகரிஷிகள் திருவொற்றியூருக்குச் சென்றதே இல்லை. ஆனால் மகரிஷிகள் சொன்ன அடையாளங்கள் யாவும் காவ்யகண்டர் அச்சமயத்தில் வசித்துவந்த கோயிலுக்குப் பொருத்தமாகவே இருந்தன.
காவ்யகண்டர் மகா மேதாவி; பண்டித சிரோமணி; அறிவிற் சிறந்த கவி. பல மொழிகளிலும் பாண்டித்யம் பெற்ற புலவர்.ஆனாலும் மகரிஷிகளிடம் உள்ள அபார பக்தியினால் தனது சிறப்பனைத்துக்கும் காரணம் தமது குருதேவரான மகரிஷியின் அருளே என்று கூறுவார். அற்புதமான யோக அநுபவங்கள் பல இவருக்கு நேர்ந்தன. 1922-ஆம் ஆண்டில் மாமரக் குகையிலிருந்து யோகம் செய்த போது கணபதி முனிவருக்கு ஒரு நாள் கபாலம் வெடித்து தழும்பும் ஏற்பட்டது.
அந்தோ! உன்னத குறிக்கொள்களைக் கொண்ட இப்பெரியார், சிறந்த தபஸ்வி, சீரிய அறிஞர், வெகுநாள்வாழ்ந்திருக்க இந்நாடு பாக்கியம் பெறிருக்கவில்லை. 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று கல்கத்தாவை அடுத்த கரக்பூருக்கு அருகில், நிம்புரா என்னும் இடத்தில் உள்ள ஆசிரமத்தில் இவர் பூத உடலை நீத்தார்.
இதர பக்தர்கள் - பாகம் 7
அக்காலத்து பக்தர்களுள் திருவண்ணாமலையில் சூபர்வைசராக இருந்த திரு இராமசாமி ஐயர் என்பவரும் ஒருவர். பகவானது சந்நிதானத்துக்கு வந்த இரண்டாம் முறையே அவரது உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது. வணங்கி வீழ்ந்து வேண்டுவாராயினர், "சுவாமி ஏசுநாதர் போன்ற மகான்கள் பாவிகளைக் கரையேற்றவே இவ்வுலகில் தோன்றினர். எளியேனுக்குக் கடைத்தேற வழியில்லையா? உய்வில்லையா?"



"ஆமாம் உய்வுண்டு, வழி உண்டு" என்றுஆங்கிலத்திலேயே விடை கிடைத்தது.



மற்றோர் ரசமான சம்பவத்தைப் பற்றி, ஐயர் தமது 'டைரி'யில் பின் வறுமாறு குறிப்பிடுகிறார்: " வெகு நாட்களாக நான் வயிற்று வலிக்காரன். உணவு சீரணம் ஆவதில்லை; தூக்கமும் இல்லை. இதைப் பற்றியே சதா கவலை. ஒரு நாள் சுவாமிகள் விசாரிக்கவே என் உடம்பைப் பற்றிச் சொன்னேன். அச்சமயம் தலையெல்லாம் சூட்டால் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர் விசாரித்த ஒரு நிமிடத்துக்குள் கொதிப்பெல்லாம் பறந்துவிட்டது. மூளை குளிர்ச்சி அடைந்தது."



"அன்று சௌமிய ஆண்டு ஆடி 18-ஆம் தேதி. அன்னமும் தோசையும் கொண்டு ஒரு பெண்மணி பகவானுக்கு

விருந்தளித்தாள். எனக்குக் கஞ்சி தான் அப்போது ஆகாரம்; வேறு எதுவும் சீரணம் ஆவதில்லை. எல்லோரும் என்னையும் சாப்பிடச் சொன்னார்கள். 'என்னால் சீரணிக்க முடியாது' என்று மறுத்தேன். ஆனால் சுவாமியும் வற்புறுத்தவே நன்றாகச் சாப்பிட்டேன். என்ன ஆச்சர்யம்! அன்றிரவுதான் அயர்ந்த, சுகமான நித்திரை.
சுவாமிகளிடம் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. முதலில் நான் சுவாமிகளிடம் போவதை விரும்பாத என் குடும்பத்தினர் என் பிணி நீங்கியதைக் கண்டதும் பகவான் சந்நிதானத்துக்கே தினந்தோறும் அன்னம் அனுப்பஆரம்பித்தனர். 'அடடா!' எத்தனையோ மருந்துகளுக்கு எவ்வளவோ ரூபாய் செலவழித்தோமே! முன்னமேயே இவரது பெருமையை உணராமல் போனோமே' என்று தோன்றியது.



எச்சம்மாள் என்று ரமணாசிரமத்தில் அழைக்கப்பட்டுவந்த ஓர் அம்மணி இருந்தாள். அவருடைய அநுபவங்கள் இதைவிட ஆச்சரியமானவை. மிகவும் பரிதாபமான நிலையில் இவ்வம்மை ஆசீரமத்தை அடைந்தார். அருமைக் கணவனைப் பறிகொடுத்த துயரம் ஆறும் முன்னரே புதல்வர் இருவரும் ஆவி துறந்தனர். எச்சம்மாளின் துயரம் சொல்லும் தரமன்று.

வீட்டில் வசிக்க மனம் சகிக்கவில்லை. வீட்டைத் துறந்து, தீர்த்த யாத்திரையாகக் கோகர்ணத்துக்குச் சென்றார். வடநாட்டிலேயே பல சாதுக்களை அடுத்து சேவை செய்தார். ஆனால் மனத் துயரம் சிறிதும் ஆறவில்லை.



இதன் பின் சுவாமிகளைக் கேள்வியுற்று திருவண்ணாமலையை அடைந்தார். மலை மீதிருந்த சுவாமிகளைத்

தரிசித்தார். அவர் அசையாது வீற்றிருந்தார். எச்சம்மாளும் நின்ற இடத்திலேயே ஒருமணி நேரம் நின்றிருந்தார். வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் இம் மௌன தரிசனம் அவரது எண்ணங்களில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது. நின்ற இடத்திலேயே வேரூன்றி நின்றார். பொழுது போய்க் கொண்டிருந்தது.
மாலையும் வந்தது. பிறகு சற்று சமாளித்துக் கொண்டு பிரியாமல் பிரிந்து சென்றார். சுவாமிகளின் அருளால் தம் துயர் எல்லாம் மறைந்துவிட்டதாகக் கூடவந்த தோழியிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment