Wednesday, May 12, 2010

ரமணர்-8

ரமணர் - 8
ஸ்ரீரமண மகரிஷி 6
இக்காலத்தில்தான் ஆங்கிலம் படித்த சிலரும் சுவாமிகளின் மகிமை தெரிந்து அடிக்கடி தரிசனத்துக்கு வருவாராயினர். இவர்களுள் சிலர் சுவாமிகளைப் பற்றியும் அவரது உபதேசங்களைப் பற்றியும் எழுதிக் குறித்து வைத்திருக்கின்றனர்.
சேயர் என்னும் பக்தரின் சந்தேகங்களுக்குச் சுவாமிகள் சிறு சீட்டுகளில் பதில் எழுதிக் கொடுப்பது வழக்கம். "விசார சங்கிரகம்" என்னும் நூல் இந்தக் குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகும். , சிவப் பிரகாசம் பிள்ளை என்னும் பக்தர் சுவாமிகளின் உபதேசத்தைத் தொகுத்து எழுதியிருக்கிறார். அந்தக் காலத்திலேயே ஆத்ம ஞானோபதேசம் சிறந்து விளங்கியதென்பதை அதில் உள்ள கீழ்கண்ட பாகங்கள் நிதரிசனமாகக் காட்டுகின்றன:
"மனமற்ற நித்திரையில் தினம் அநுபவிக்கும் தன் சுபாவமான அந்தச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு, 'நான் யார்' என்னும் விசாரமே முக்கிய சாதனம்." "நான் யார் ? சப்த தாதுக்களாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ர., கந்தம் என்னும் பஞ்ச வி"யங்களையும் தனித்தனியே அறிகின்ற ஞானேந்திரியங்களும் நானன்று. வசனம், கமனம், தானம், மலவிசர்னம், ஆனந்தித்தல் என்னும் ஐந்தொழில்களையும் செய்கின்ற கன்மேந்திரியங்களும் நானன்று. சுவாசாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. சர்வ வி"யங்களும் சர்வ தொழில்களும் அற்று, வி"ய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி யிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. மேற்சொல்லிய யாவும் நானல்ல, நானல்ல வென்று நேதி செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.
அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்." "நானார் என்னும் விசாரணையிலேயே மனம் அடங்கும்; நானார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்துப் பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். (அப்போது) ஆத்ம ஞானமே திகழும்." இதன் பின் மகரிஷிகளின் அருளுக்குப் பாத்திர மானவர்களுள் முக்கியமானவர் , காவ்யகண்ட கணபதி சாஸ்த்ரிகள் ஆவர். இவரது வரவு பல விதங்களில் விசேடம் வாய்ந்தது. கணபதி முனிவர் மகா பண்டிதர் என்று பெயர் படைத்தவர்; பெரிய கவி; வேதாந்தி. இவர் பன்னீரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றியும் கருதிய பலன் ஒன்றும் கிட்டாமல் மனம் வருந்தி நின்றார். 1907-ஆம் ஆண்டு ஒருநாள் திருவண்ணாமலைச் சுற்று வழியில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் இருந்தார். திடீரென்று, " பகவான் அழைக்கிறார்" என்று அசரீரி ஒன்று அழைப்பது போல் தோன்றியது.

உடனே இருக்கையை விட்டு எழுந்து கோவிலை நோக்கி நடந்தார். வழியிலே அருணாசலேசுவரர் ஊர்வலம் வருகிறார். சாஷ்டாங்கமாக அஞ்சலி செய்தார். ஆனால் அசரீரியின் அழைப்புக்கு அர்த்தம் புலப்படவில்லை.
சஞ்சலமடைந்த மனத்துடன் இருந்த அவருக்கு மறுநாள் மத்தியானம் மலைமீதுள்ள சுவாமிகளின் ஞாபகம் வந்தது. உக்கிரமான வெயிலையும் கவனியாமல் உடனே மலைமீது ஏறிச் சென்றர். அன்று அதிர்ஷ்ட வசமாக விருபாக்‌ஷிக் குகையின் தாழ்வாரத்தில் சுவாமிகள் தனியே அமர்ந்திருந்தார். கணபதி முனிவர் சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து தம் இரு கரங்களாலும் சுவாமிகளின் அடிகளைப் பற்றிக்கொண்டு சரண் புகுந்தார். " கற்க வேண்டிய யாவையும் கற்றேன்; வேதாந்த சாஸ்த்திரங்கள் யாவையும் பயின்றேன்; மனங்கொண்டமட்டும் மந்திரங்களைச் செபித்தாகி விட்டது.ஆனாலும் தபஸ் என்பதின் தாத்பர்யம் தெரியவில்லை ஐயனே! உனது அடியினைச் சரண் அடைந்தேன்." என்று இறைஞ்சினார்.
சுவாமிகள் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை கணபதி முனிவரைக் கருணையுடன் நிச்சலமாகக் கடாக்‌ஷித்து இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார்: "நான், நான்" என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே வீனமாகும். அதுவே தபஸ் ஒரு மந்திரத்தை செபம் பண்ணினால், அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதைக் கவனித்தால் மனம் அங்கே வீனமாகிறது. அது தான் தபஸ். இவ்வருள் வாக்கு, இத்திவ்ய உபதேச மொழிகள் கணபதி முனிவரின் ஐயங்கள் யாவையும் தீர்த்துவிட்டன. குகையிலேயே அன்று இரவுவரை தங்கினார். பக்கத்தில் உள்ளவரிடம், ரமண மகரிஷிகள் என்பதே சுவாமிக்குப் பொருத்தமான பெயர் என்று வெளியிட்டார். "மறுவிலாக் காட்சிப் பெரியனை இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக" என்று பாடி, "இனிமேல் பகவான் என்றே பக்தர் யாவரும் மகரிஷிகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார். அன்று முதல் இப்பெயர்கள் நிலைத்துவிட்டன. மகரிஷிகளைச் சேர்வதற்கு முன்னமேயே காவ்யகண்டர் பிரசித்திபெற்றவர். அவரைப் பின்பற்றும் பக்தர்கள் பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment