Wednesday, May 12, 2010

ரமணர்-14

ஆன்மவிசாரம் - பாகம் 15
நாம் எதை அறிய விரும்புகிறோமோ அதை நாடுகிறோம். அவ்வாறே தன்னையறிய விரும்புவோர் தன்னையே நாடவேண்டும்.

ஆயின் உலகிற் காணப்படும் ஆராய்ச்சிகள் முழுவதும் தன்னை விட்டு முன்னிலை, படர்க்கைப் பொருளாகிய உலகையும் கடவுளையும் ஆராய்வதே யாகு மல்லவா? உலகம், கடவுள் இவைகளை ஆராயும் அறிவாகிய மனிதன் தன்னை யாரென்று சரியாக இன்னும் அறியவில்லை. 'நான் மனிதன்' என்கிறோம். இது அறியாமையே தவிர, தன்மையின் உண்மையான அறிவல்ல. ஏனெனில் நமது உடைமையாகிய உடம்பையே நாம் என்று தவறாக எண்னுவதால்தான் 'நான் மனிதன்' என்கிறோம். உடையவனாகிய நான் யாரென்று உடம்பினின்றும் நம்மைப் பகுத்து அறியும் அறிவே சரியான பகுத்தறிவு. தேகமே நானென் றுணரும் அறிவு (அகங்காரம்) போலித் தன்மையுணர்வே. அகண்ட ஆன்மாவாகத் தன்னை யறிவதே மெய்யான தன்மை யறிவு அல்லது ஆன்ம ஞானம்.

உறக்கத்திலிருந்து உணர்வு எழும்போது, 'நான் இவ்வுடல்' என்ற வடிவில் நம்மை உணர்கிறோம். ஆனால் உறக்கத்தில் உடல், உலக உணர்வுகள் இல்லை. 'நான் இருக்கிறேன்' என்ற சுத்தவுணர்வு உறக்கத்திலுள்ளது.
விழிப்பில் இத் தன்னுணர்வு "நான் உடலாக இருக்கிறேன்; நான் மனிதனாக இருக்கிறேன்; நான் இன்னாராக இருக்கிறேன்" என்றவாறு ஓர் உபாதியைச் சேர்த்துக்கொண்டு எழுகின்றது. இதுவே அகந்தை, ஜீவ போதம்; இதுவே பந்தம். இதுவே முதல் எண்ணம்.
இந்த முதல் எண்ணமாகிய மனிதனுக்கே முன்னிலை படர்க்கைகளின் உணர்வாகிய பிற எண்ணங்கள் உருவாகின்றன. முன்னிலை படர்க்கைகளை நாட நாட மேலும் எண்ணங்கள் விருத்தியாகிக் கொண்டே போகும். தன்மை உணர்வாகிய 'நான் இன்னாராக இருக்கிறேன்' என்ற அகந்தை வடிவத்தை இதன் இருப்பு எத்தகையது என்று நாட வேண்டும்.

விதேக கைவல்யம்.

பகவான் ஸ்ரீ ரமணரின் தேக வாழ்வின் இறுதிக்காலம் பிரம்மஞானி ஒருவரின் மகிமை எப்படிப்பட்ட தென்பதைக் கையிற் கனியாய்க் காட்ட வல்லதா யிருந்தது. தாம் அருணாசலத்தில் அடி வைத்த நாள் முதலாய் அரை விநாடி கூட அவர் எங்கும் செல்லாமல் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்திருந்தார். 1949-ஆம் ஆண்டு அவரது இடது புஜத்தின் கீழ்பாகத்தில் 'சர்கோமா' எனப்படும் ஒரு விதப் புற்று நோய்க் கட்டி புறப்பட்டது.
ஆரம்பத்தில் சிறியதாக இருந்த அது இரண்டு முறை அறுவைச் கிச்சை செய்யப்பட்ட பிறகும் மீண்டும் பெரியதாக வளர்ந்து உடம்பின் இரத்த மெல்லாம் உறிஞ்சி ஊற்றாக வெளியிற் பெருக்க ஆரம்பித்தது. ரேடியம் சிகிச்சை போன்ற பல்வேறு வைத்திய முறைகளுங் கையாளப்பட்டன. 19-12-'49 இல் நான்காவது முறையாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்துங் கூட நோய் தணியவில்லை. அவ் வறுவைச் சிகிச்சையின் போது மயக்க மருந்து கூடக் கொடுக்க வேண்டாம் என்று பகவான் தடுத்துவிட்டார். "வலி இல்லையா? " என்று பக்தர் ஒருவர் பகவானிடமே கேட்டார். அதற்கு விடையாக "வலியும் நமக்கு அன்னியமல்லவே" என்றார் பகவான். நாக்கைக் கடிக்கும் பற்கள் எப்படி நமக்கு அன்னிய மல்லவோ, ரமணரை அடித்த கள்வர்கள் எப்படி அவருக்கு அன்னியராகத் தோன்றவில்லையோ, அப்படியே உடலை உழற்றும் நோயும் வலியும் கூட 'நானே' என்ற அனன்னிய ஆத்ம பாவமே அவரது அதிசயிக்கத் தக்க ஞான நிலையாக யிருந்தது.

கொடிய வலிதரும் நோயின் இடையிலும் நகைச் சுவை ததும்பும் ஞான மொழிகளால் பகவான் தம்பொருட்டு வருந்தும் பக்தர்களின் வாட்டத்தை அடிக்கடி போக்கி வந்தனர். " இவ்வுடம்பே நமக்கு ஒரு நோய்; அந்நோய்க்கு ஒரு நோய் வந்தால் நல்லது தானே நமக்கு" என்பார். ஒரு பக்தரிடம், "சுவாமி போய்விடப் போகிறாறே என்று வருந்துகிறீர்களா? எங்கே போவது? எப்படிப் போவது? போக்கு வரவு எதற்கு? தேகத்திற்கே! நம்மக்கேது!" என்றார் பகவான். மற்றொரு முறை, "கொம்பிற் சுற்றப்பட்ட மாலையொன்று நழுவியதையோ அன்றி இருப்பதையோ அறியாத பசுவைப் போலவும், தன் உடல் மேலிருந்து ஆடை போயிற்றா, இருக்கிறதா என்றறியாத ஒரு குடிவெறியனைப் போலவும், ஞானியொருவன் தனக்குச் சரீரம் என்று ஒன்று இருக்கிறதா, போயிற்றாஎன்பதை அறிவதே யில்லை!" என்றும் விளக்கி யருளினார்.

இறுதி வரையிலும் மக்கள் தன்னை தரிசிப்பதை யாரும் தடை செய்யக் கூடாது என்று பகவான் திட்டப் படுத்தினார்.

1950-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, இரவு மணி 8-47க்கு, உடல் பத்மாசனம்
இட்டவாறே அமர்ந்திருக்க, ஒவ்வொரு மூச்சும் சீராகச் சென்று முடிவில் உள்ளே இதயத்தில் ஒடுங்கிற்று. பகவான் ஸ்ரீ ரமணர் தமது நர வேடத்தைக் களைந்து, தமது யதார்த்த சொரூபமான போக்கும் வரவும் இலாப் பொது அருள் வெளியாய், ஏதும் மறைப்பின்றி என்றும் பரிபூரணமாய்ப் பிரகாசித்தார்.

விக்கிருதி சித்திரை மேவுங் கிருட்டிணப்
பக்கத் திரயோ தசிதிதியிற்-சுக்கிர
வாரம்பூ ரட்டாதி மாவிதேக கைவல்யம்
சீரமண னுற்ற தினம்.

அச்சமயம் மாத்ரு பூதேசுர ராலய முன்றிலில் அமர்ந்திருந்த பக்தர்கள் சிலர், பகவான் இருந்த அறையின்
வாயிலில், ஓர் பேரொளி தோன்றி அவ் வறையையும் சுற்றுப் புறத்தையும் வியாபித்துப் பரவியதைக் கண்டனர். இது ஏதேனும் புகைப் படம் எடுக்கும் வெள்ளொளி யாயிருக்கலாமோ வென ஐயுறு முன்பே அதே சமயத்தில், அருகில் வெட்ட வெளியிற் கூடியிருந்த மக்கள் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி, "இதோ ஜோதி; ஜோதி போகின்றது!" என்று கூவினர். வான வீதியில் அவ் வெண் ஜோதி தோன்றி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சென்று, ஸ்ரீ அருணாசலத்தின் உச்சிக்குப் பின் மறைந்தது! ஸ்ரீ ரமணமா ஜோதி வாழ்க!
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் திரு மேனியை ரமணாசிரமத்தில் அப்பெருமான் வாழ்ந்திருந்த அறைக்கும், அன்னையின் ஆலயத்திற்கும் இடையிற் சமாதி செய்வித்து ஸ்ரீ ரமண லிங்க மூர்த்தியைப் பிரதிஷ்ட்டை செய்வித்தனர்.
அதன்மேல் அழகிய மணி மண்டபாலயம் ஒன்று நிருமாணிக்கப்பெற்று 18-06-'67 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அச் சந்நிதியின் முன் பாகத்தில் உற்சவாதிகள் நடை பெறுவதற்கான ஒரு பெரிய சபா மண்டபமும் அமைக்கப்பட்டது."தான் இவ்வுடலல்ல; உள்ள பரம் பொருளே தான்" என்ற மகானுபவியான பகவான் ஸ்ரீ அருணாசல் ரமணரது அருட் சந்நிதி, ஞான தாகமெடுத்த உலகிற்கு மோனமாக
என்றென்றும்அருளமுதம் ஊட்டி வருகின்றது.



வாழிஸ்ரீ ரமண ஜோதி வள்ளலே வாழி வாழி
வாழிநீ கால மூன்றின் வரையறை கடந்தோய் வாழி
வாழிநீ புவனகோடி வடிவெலா நிறைந்தோய் வாழி
வாழிநீ யூழி வெள்ள மதிற்கெடா வங்கம் வாழி!

வாழிஸ்ரீ ரமண ஞான வாரிதி வாழி வாழி
வாழிஸ்ரீ ரமண நாம மந்திரம் வாழி வாழி
வாழிஸ்ரீ ரமண மூர்த்தி வாழியென் பார்நீ டூழி
வாழிநீ எம்மைக் காக்கு மகாகுரு ரமண வாழி!
________________________________________

ஸ்ரீ ரமண சரித சுருக்கம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment