Wednesday, May 12, 2010

ரமணர்-13

இந்தியர்-வெள்ளையர், என்ற இன வேறுபட்டையும்,இந்து-கிறிஸ்தவர்-முகம்மதியர்-பௌத்தர்-ஜைனர்-சீக்கியர் என்ற மதவேறுபாட்டையும் மறந்து, மக்கள் பலரும் வெகு தொலைவிலிருந்தும் வந்து, இந்த ஞான வள்ளலையடுத்துத் தத்தமது மத குருஇவரே என்று போற்றிப் பணியலாயினர். அவர்களுள்ள்ளும் உத்தமப் பக்குவிகளான எத்தனையோ பேர் ஸ்ரீ ரமண தரிசன மாத்திரத்தாலும், அவரது சந்நிதி விசேடத்தாலும், அருகிலிருந்து தொண்டாற்றியும், உபதேசங்களைக் கடைப்பிடித் தொழுகியும் மெய்யறிவு விளக்கமுற்றனர்.

பாரதத்தின் முன்னாள் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் 1938-ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜியின்
ஆஸ்ரமத்திற்குச் சென்று," பாபுஜி, சாந்தியை நாடித் தங்கள் ஆசிரமத்திற்கு வந்துள்ளேன்" என்றார். சாந்தியின்
நிலைக்களம் காந்திஜி அறிந்ததே. அதனால் மகாத்மாஜி," சாந்தியை நீவிர் விரும்பு வீராயின் ரமணாசிரமம்
போம்; அங்குச்சென்று ஸ்ரீ ரமண மகரிஷிகளின் சந்நிதியிற் கேள்வி, பேச்சுக்களற்றுக் கொஞ்ச நாள் இருந்துவாரும்" என்று கூறி அனுப்பி வைத்தார். அதன்படி ராஜன் பாபு 14-08-1938-ல் ரமணாசிரமத்திற்கு வந்தார். உடன் வந்தவர்கள் பகவானிடம் ஏதேதோ ஆன்மீக விஷயங்களை வினவியும் , பகவான் தவமிருந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தும் வந்தனரேனும், ராஜன் பாபுமட்டும் ஸ்ரீ ரமண சந்நிதியை விட்டு நகரவே யில்லை! மேலும், காந்திஜியின் அறிவுரைப்படியே யாதொரு பேச்சும் கேள்வியும் எழுப்பாமலேயே ஒரு வாரம் முழுவதுங் கழித்தார்!
அவர் விடை பெறும் போது பகவானை அணுகி, " பகவன், காந்திஜியே என்னை இங்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நான் தங்களிடமிருந்து கொண்டுசெல்ல ஏதேனும் செய்தி யுளதோ?" என்று வினயமாய் வேண்டி நின்றார்.

"எந்த சக்தி இங்கே நடத்திக் கொண்டிருக்கிறதோ, அதுவேதான் அங்கேயும் நடத்தி வருகின்றது! இதயம்
இதயத்தோடு பேச வாய்ச்சொல் எதற்கு?" என்றனர் பகவான். எங்கு நிறைந்த பரம் பொருளின் ஏகத்துவ இரகசியத்தை விளக்கும் ஞான மொழிகளே இவை யன்றோ? இங்ஙனம், ரமண பகவானது காலத்தில் வாழ்ந்த புவியரசர்கள், கவியரசர்கள், அறிஞர் திலகங்கள், அரசியல் தலைவர்கள், வேதாந்திகள், துறவிகளாகிய பெரியோர் அனைவரும் பகவானின் ஞான மகிமையைப் போற்றி வந்தனர்.

உபதேசங்கள்: குறிக்கோளும் வழியும் -பாகம் 14

பரிபூர்ண சுகத்தை யடைவதையே பகவான் ஸ்ரீ ரமணர் மனித சமூகத்தின் குறிக்கோளாகக் காட்டிக் கொடுக்கின்றனர். சுகத்தை விரும்பாத ஜீவர் யாரு மில்லை. சகல ஜீவர்களும் தத்தம் சகலவித முயற்சியாலும் நாடுவது சுகத்தையே அல்லவா? ஆகையால், பகவானது குறிக்கோளை மறுப்பவர் யாருமிலர். இக் காரணத்தாலேயே ரமணோபதேசங்கள் யாதொரு தனிப்பட்ட மதக் கொள்கையு மாகாமல், சகல உயிர்கட்கும் புகலளிக்கும் பொதுப் பெரு நெறியாக விளங்குகிறது. அதனால் தான் உலகின் எந் நாட்டினரும் எம் மதத்தினரும் ஸ்ரீ ரமணோ பதேசங்களை மிக்க விருப்புடன் ஏற்றுப் பின்பற்றுகின்றனர்.

சுகம் என்பது யாது? இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால் தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக்கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தை யிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மை யியல்பை- ஆன்மாவை-அறிவதொன்றே போதும்.

"நாம் சுகமடைய முயல்வது சுயநலமல்லவா? " என்று சிலர் கேட்பதுண்டு. 'சுயம்' என்ற பதத்தின் சரியான
பொருளைத் தெரிந்து கொள்ளாததால்தான் இக்கேள்வி பல நன் மக்களிடமும் எழுகின்றது. 'சுயம்' என்பது ஆன்மாவே.

தன்னை அகண்ட ஆன்மா என்றறியாமல், தன்னைக் குறுக்கி நோக்கி, 'இவ்வுடலே நான்' என்று கருதுவதால் தான் 'சுய நலம்' என்ற சொல் கீழ்மைக் குணத்தைக் குறிக்கும் சொல்லாக நம்மிடையே வழங்கி வருகின்றது. "சகல உயிர்களிலும் ஏகமாய் ஒத்து விளங்கும் ஆன்மாவே நான்" என்றறியும் ஆன்ம ஞானி ஒருவனின் அனுபவத்தில்'சுய நலம்' என்பது சகல உயிர்களின் நலமே ஆகிறதல்லவா? ஆன்ம ஞானம் உண்டானால்தான் சகல உயிர்களின் உண்மையும் தானே என்பது விளங்கும்.

உலகப் பொருளைத் தேடிக் குவித்துப் பஞ்சேந்திரியங்களின் மூலம் அவற்றை அனுபவித்தடையும் சுகம் மிக அற்பமும் அநித்தியமும் மாகின்றது. இவ்வாறு அற்ப சுகானுபவியாக நாம் ஆகாமல், பரிபூரண சுகானுபவியாவதே நமக்கு ஸ்ரீ ரமணபகவான் காட்டித்தரும் குறிக்கோள்.இக்குறிக்கோளை யடைய ஸ்ரீ பகவான் வகுத்தளித்துள்ள வழிகள் இரண்டு.
1. தன்னை 'நான் யார்?' என்று விசாரித்து அறியும் ஆன்ம விசாரம்.
2. (இறைவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்புவித்திடும் ஆன்ம சமர்ப்பணம். முந்தியது அறிவு நெறி(ஞானமார்க்கம்), பிந்தியது அன்பு நெறி(பக்தி மார்க்கம்.)

No comments:

Post a Comment