Wednesday, May 12, 2010

ரமணர்-12

ரமணர் – 12

ஸ்ரீ ரமணாசிரமம் - பாகம் 11



முதலில் கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பெற்றிருந்த அன்னையின் சமாதிக்கு ஸ்ரீ ரமண பகவான்

ஸ்கந்தாசிரமத்திலிருந்து அடிக்கடி வந்து போவதுண்டு. 1922- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பகவான் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். நாளடைவில் பக்தர்களும் அங்கேயே வந்து கூடித் தங்கிப் பகவானைத் தரிசிக்க ஆரம்பித்தனர். அதனால் இச்சந்நிதி வரவர பற்பல அழகிய கட்டிடங்களாக வளர்ச்சியுற்று, தற்போதுள்ள 'ஸ்ரீ ரமணாச்சிரமம்' ஆயிற்று.



பரிபூரண சமத்துவமே பகவானின் தினசரி வாழ்வாயிற்று. நம் நாட்டின் பரம ஏழை ஒருவன் தனது உடலின்

தேவையாக எவ்வளவு உடுத்தியிருப்பானோ அதைவிடக் குறைவான உடையையே-ஒற்றைக் கௌபீனத்தையே - அவர் தமது இறுதி நாள் வரை உடுத்திவந்தார். உணவிலும் அப்படியே. அனைவருடனும் சமமாக அமர்ந்தே அவர் உண்பார்.
அனைவருக்கும் எது பரிமாறப்படுகிறதோ அதை மட்டுமே, அதிலும் குறைந்த அளவிலேயே, தாம் ஏற்றுக்கொள்வார். அவர் சந்நிதியில் யார் எதைக் கொண்டுவந்து சமர்ப்பித்தாலும் அது அவ்வப்போதே அனைவருக்கும் சமமாகப் பங்கிடப்பட்டு வினியோகிக்கப்படும். பசு, நாய், குரங்கு, அணில், மயில் முதலிய சகல ஜந்துக்களுக்கும் அங்கு அத்தகைய சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட்டு வந்தன. 'பசு லக்ஷிமி' ஆசிரமத்தின் செல்வ மகள் போல் வாழ்ந்து இறுதியில் பகவானது ஹஸ்த தீக்ஷையுடன் 18-06-1948 இல் முக்தியடைந்தாள்.



பகலும் இரவும் பகவான் வாழ்ந்துவந்த அறையின் கதவுகள் திறந்தே இருக்கும். அகண்ட சிதாகாச வெற்ற வெளியாக விளங்கிய அவருடைய வாழ்வில் மறைவேது? மறைந்திருக்க அவசியம் ஏது? நடு நிசியிலும் கூட அன்பர்கள் சென்று அவரைத் தரிசிக்கலாம். "நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர், கரவார் கரவிலா உள்ளத்தவர்" என்பது ஆன்றோர் வாக்கன்றோ? அவரது தரிசனம் சகலர்க்கும் சதாகாலமும் நிபந்தனையற்ற பாக்கியமாக இருந்தது.

ஆசிரமத்தின் ஆதிக்காலத்தில் கள்வர் சிலர் நடுநிசியில் வந்தபோதுங்கூட,பகவான், " உள்ளேவந்து வேண்டியதை எடுத்துப்போகலாமே " என்று வரவேற்பளித்தனரென்றால், அவரது வெற்ற வெளி வாழ்வுக்கு வேறென்ன சான்று வேண்டும்?
கள்வருக்கும் கருணை -பாகம் 12
1924-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 26-ஆம் நாள் நள்ளிரவு; மணி 11-30 இருக்கும். சில கீற்றுக் கொட்டகைகளே

அப்பொழுது இருந்த ரமணாசிரமம். ஆனால், இது பணம் பெருத்த திருமடம் என்றெண்ணிய சில திருடர்கள் அங்கு வந்து புகுந்து ஜன்னல்களை நொறுக்கி அட்டகாசம் செய்தனர். பகவான் ஸ்ரீ ரமணர் படுத்திருந்த அறையில் கூடவே சில அடியார்களும் இருந்தனர். பகவான் திருடர்களை உள்ளே வரச் சொல்லி, அவர்களுக்கு வேண்டியதை இருளில் பார்த்து எடுத்துக் கொள்வதற்காக ஹரிக்கேன் விளக்கு ஒன்றை ஏற்றித்தரச்செய்தார். " உன் பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?" என்று உறுமினர் கள்வர்கள். " நாங்கள் பிட்சை எடுத்து உண்ணும் சாதுக்கள்; எங்களிடம்பணம் இல்லை; இங்கே உள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லுங்கள்; நாங்கள் வெளியேறி விடுகிறோம்." என்று பகவான் கூறி அடியார்களுடன் வெளியில் வந்து உட்கார்ந்தார். வெளியேறும் போது ஒவ்வொருவரையும் திருடர்கள் அடித்தனர். ஸ்ரீ பகவானுக்கும் இடது தொடையில் ஓர் அடி விழுந்தது! "அப்பா! உனக்கு திருப்தியாகாவிட்டால் மற்றொரு தொடையிலும் அடி" என்று பரிந்து கூறினார் பகவான்!




கள்வர்க்கும் காட்டிய கருணை அம்மட்டோ! எதிர்த்துத் திருடரைத் தாக்கக் கிளம்பிய இளஞ்சீடர் ஒருவரைப் பகவான் தடுத்து," அவர்கள் தர்மத்தை அவர்கள் செய்யட்டும்; நாம் சாதுக்கள்; நம் தர்மத்தை நாம் கைவிடக்கூடாது; எதிர்ப்பதால் சம்பவிக்கும் விளைவுக்கு நாளை உலகம் நம்மையே குறை கூறும். நம் பற்கள் நம்நாக்கைக் கடித்துவிட்டால் பற்களை உடைத்தா எறிந்துவிடுகிறோம்?" என்று சாந்தோபதேசம் செய்தனர்.



"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)

அறனல்ல செய்யாமை நன்று"

-குறள் 157.



சில நாட்களில் அத் திருடர்களை காவல் துறையினர் பிடித்துக் கொண்டுவந்து ஸ்ரீ பகவான் முன்னிலையில்

நிறுத்தினர்.. "பகவானே, இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்! " என்று அவர்கள் வேண்டினர். " நான் யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ அவன் தான் என்னை அடித்தான்! அவனை நீர் கண்டுபிடியும்!! " என்று கூறி நகைத்தனரே தவிர அக்குற்றவாளியைக் காட்டியே கொடுக்கவில்லை.



"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தந்

தகுதியான் வென்று விடல்."

குறள் 158



"இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்."

குறள் 314
உலகங்கவர்ந்த உத்தமர் - பாகம் 13



பைபிளுங் குறளும் பகவத் கீதையும் உபநிஷத்தும் உடல்தாங்கி உலவிய உருவமே பகவான் ரமணர் என்ற உண்மையைக் கொஞ்சங் கொஞ்சமாக உலகின் எல்லா நாட்டு மக்களும் அறிந்து கவர்ந் திழுக்கப்படலாயினர்.

No comments:

Post a Comment