Wednesday, May 12, 2010

ரமணர்-1


பகவான் ஸ்ரீ ரமணர்

[அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான், ரமணமகரி"களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.]

எழுதியவர் திரு இ.ஆர்.கோவிந்தன், பதிப்பாளர் சி.டி.என்.வெங்கட்ராமன்,நிர்வாகி,-தலைவர், ரமணாச்ரமம்திருவண்ணாமலை 1963

இந்த நூலை முழுவதுமாக தட்டச்சு செய்து வழங்கியவர் ஓம். சுப்ரமணியம் அவர்கள். இப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நிழற்படங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளைப் பதிப்பிற்காக தொகுத்து வழங்கியவர் திரு.ஹரி கிருஷ்ணன் அவர்கள்.

பாரத நாட்டின் புண்ணிய தினங்களில் ஆருத்ரா தர்சனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.கௌதமர், பதஞ்சலி போன்ற பக்தசிரேஷ்டர்களுக்கு சிவ பெருமான் காட்சியளித்த இப்புனித நாளன்று, 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இரவு ஒரு மணிக்கு , ரமண மகரிஷி பிறந்தார்.

அவர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை அருகே அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமம். அவரது தந்தை திரு சுந்தரம்ஐயர். கண்ணியமாக வக்கில் தொழில் நடத்திவந்தார்.அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகியரமணனுக்கு வேங்கடராமன் என்று நாமகரணம். குழந்தை வேங்கடராமனை உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர்திண்டுக்கல் சென்று ஒரு ஆண்டு ஐந்தாவது வகுப்பில் படித்தார். இதற்குப் பின்னர் மதுரைக்குப் போய் ஸ்காட்ஸ்இடைநிலைப் பள்ளியிலும், மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் வாசித்தார்.

பள்ளிப் பிராயத்திலெல்லாம், வருங்காலத்து மகிமையைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் அச்சிறுவனிடத்தில் காணப்படவில்லை. வகுப்பிலே அபார அறிவுடன் பிரகாசிக்கவில்லை. மகா புத்திசாலி என்றும் பேரும் எடுக்கவில்லை. நல்லவலுவான உடல் உறுதி உண்டு. இதைத் தவிர மற்றச் சிறுவர்களைவிட எவ்விதத்திலும் அவர் சிறந்து விளங்கவில்லை.

குறிப்பிடத் தக்க நிகழ்வு.

பதினாறு வயது வரை இப்படிப் படிப்பில் கழிந்தது. 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவரது வாழ்வில் ஓர் முக்கியசம்பவம் நிகழ்ந்தது. ஊரிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார்."எங்கிருந்து வருகிறீர்?" என்று வேங்கடராமன் நலம் விசாரித்தார்."அருணாசலத்திலிருந்து வருகிறேன்" என்று வந்தது பதில். அது அவரைப் பரவசப்படுத்தியது. சிறு வயது முதல் உள்ளத்தில் தானே ஒலித்துக் கொண்டிருந்த 'அருணாசலம்' என்னும் ஏதோ ஒன்று,பூமியிலுள்ள ஓர் தலம், மலை என்னும் உரையைக் கேட்டு அவர் ஆச்சரியமுற்றார்.

ஆனால் அவர் அதைப் பற்றி அதிகம் ஒன்றும் நினைக்கவில்லை. இதன் பிறகு பெரிய புராணம் என்னும் நூல் கிடைத்தது. அதிலடங்கிய நாயன்மார்களுடையதிவ்ய சரித்திரங்கள் அவரது சிந்தையைக் கவர்ந்தன. ஆயினும் இந்த அனுபவங்கள்கூட மனதில் ஆழப் பதியவில்லை.கடைசியாக 1896-ஆம் ஆண்டில் தான் திடீரெனஒரு மாறுதல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment